பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள எட்டாம் படைவீடு முருகன் கோயிலுக்கு நேற்று காவடி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமிதரிசனம் செய்தனர். முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன.

பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் பால் குடம், காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியவாறும் கோயிலுக்கு வந்து,முருகனை வழிபட்டனர்.

பாரிமுனை அருகே உள்ள கந்தகோட்டம் முருகன் கோயிலில் சொக்கநாதர்- மீனாட்சி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். தொடர்ந்து, சுவாமிதிருவீதி உலா நடைபெற்றது. பங்குனி உத்திரத் திருநாளையொட்டி நேற்று முழுவதும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து,சுவாமியை தரிசனம் செய்தனர்.

இதேபோல, குன்றத்தூர், திருப்போரூர், வல்லக்கோட்டை உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

SCROLL FOR NEXT