தமிழகம்

ஹோலி பண்டிகை கொண்டாட்டம்: புதுச்சேரி, விழுப்புரத்தில் உற்சாகம்

செய்திப்பிரிவு

கரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள சூழலில் இரு ஆண்டுகளுக்குப் பின் புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் வட இந்தியர்களால் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

வடமாநிலத்தவர்கள் பனிக்காலம் முடிந்து வேனிற்காலம் தோன்றும் காலத்தை ஹோலி பண்டிகையாக மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.

உறவுகள், நண்பர்கள் தாண்டி அக்கம் பக்கத்தினர், உடன் பணியாற்றுவோர் என அனைவர் மீதும் எந்தவித பேதமுமின்றி வண்ணங்களைத் தெளித்து இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.தேங்காயுடன் இனிப்புகளை ஹோமத் தில் இட்டு கடவுளை வணங்குவதும் இந்த நாளில் வழக்கம்.

தற்போது கரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால் புதுச்சேரியில் வடமாநில மக்கள் வாழும் பகுதிகள், ஜிப்மர் மருத்துவக் கல்லூரி வளாகம், மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நேற்று உற்சாகமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், நடனமாடியும் உற்சாகமாக ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பள்ளம் தோண்டி தண்ணீரை நிரப்பி, அந்தச் சேற்றில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பிரபலமான பாடல்களை பாட விட்டு நடனமாடினர்.

அதேபோல் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், வடமாநில மக்கள் அதிகளவில் வசிக்கும் ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஹோலி பண்டிகை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் காமராஜர் தெருவில் வசிக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பத்தாருடன் நேற்று அதிகாலை தொடங்கி இரவு வரை வண்ணங்களை தூவி மகிழ்வுடன் ஹோலி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடினர்.

SCROLL FOR NEXT