தமிழகம்

வனத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்பு: மேகமலை பகுதி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

செய்திப்பிரிவு

மேகமலை புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட மலை கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்ற வனத்துறையினர் முயற்சிப்பதைக் கண்டித்து அப்பகுதியினர் கடமலைக்குண்டுவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் உள்ள அரசரடி, இந்திரா நகர், தும்மக்குண்டு, காந்திகிராமம், வாலிப்பாறை, முருக்கோடை, மஞ்சனூத்து உள்ளிட்ட கிராமங்களில் பீன்ஸ், கொட்டை முந்திரி, எலுமிச்சை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இப்பகுதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புலிகள் காப்பகமாக அரசு அறிவித்தது. இதையடுத்து, இப்பகுதியில் விவசாயம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் மலை கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதைக் கண்டித்து கிராம மக்கள் சார்பில் கடமலைக்குண்டுவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் தேனி மாவட்டச் செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக் குழு உறுப்பினர் ராஜப்பன், மாவட்டச் செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் போஸ், தும்மக்குண்டு முன்னாள் ஊராட்சித் தலைவர் சின்னகாளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பகுதியில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும். கிராம மக்களை வெளியேற்றக் கூடாது என்று வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT