மதுரை மாநகராட்சி கோ.புதூர் காய்கறி மார்க்கெட்டுக்கு மத்திய உணவுப் பாதுகாப்புத் துறையால் சுகாதாரமான, பாதுகாப்பான காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் இடம் என சான்று வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி சார்பில் கோ.புதூரில் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் செயல்படுகிறது. மாநகராட்சி சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி காய்கறி, பழங்கள் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள், பொதுமக்கள் இந்த மார்க்கெட்டில் வந்து காய்றிகள், பழங்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்த மார்க்கெட்டில் 50 கடைகள் செயல்படுகின்றன.
தற்போது மத்திய உணவுப் பாதுகாப்புத் துறையினர் இந்த மார்க்கெட்டை தர ஆய்வு செய்தனர். இதில் மார்க்கெட்டில் சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்வதை உறுதி செய்துள்ளனர். அதனால், தற்போது மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை இந்த மார்க்கெட்டுக்கு சுகாதாரமான, பாதுகாப்பான காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் இடம் என்று சான்று வழங்கி கவுரவித்துள்ளது.
இந்தச் சான்றை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் வி.ஜெயராம பாண்டியன், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயனை சந்தித்து வழங்கினார்.