மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த நெம்மேலி கிராமத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி கோயில் கருவறையில் பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி உலோக சிலைகளை மறைத்து வைத்திருந்ததாக, கோயில் குருக்கள் சூரியமூர்த்தி(75) என்பவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
இந்நிலையில், நெம்மேலி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள மற்றொரு கோயிலில் பாதுகாப்பின்றி இருந்த சிலைகளை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப் படைத்தும், அவர்கள் வாங்க மறுத்துவிட்டதால், அந்த சிலைகளை பாதுகாத்து வந்த குருக்கள் சூரியமூர்த்தியை போலீஸார் கைது செய்துள்ளதாக நெம்மேலி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, குருக்கள் சூரியமூர்த்தியின் கைதை கண்டித்தும், உடனடியாக அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி, நெம்மேலி கிராம மக்கள் சார்பில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன், இந்து மகாசபை ஆலய பாதுகாப்பு குழு மாநிலத் தலைவர் ராம நிரஞ்சன், விஎச்பி மண்டல செயலாளர் செந்தில்குமார், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கத் தலைவர் சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.