தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரி களின் இனப்பெருக்க காலமாக, மத்திய வேளாண் அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கில், இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான 45 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை அமலில் இருக்கும். இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலில் ஆழம் குறைந்த பகுதிகளில் நிறுத்தப் பட்டிருக்கும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, எஸ்.பி. பட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, வாலி நோக்கம் கடலோரப் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீ்ன்பிடித் துறை முகத்தில் நிறுத்தப்படும். மேலும் மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தடைக்காலம் அமலில் இருக்கும் 45 தினங் களுக்கு வேலைவாய்ப்புக்காக தொழில்முறை மீனவர்கள் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து, கடல்சார் தொழிலோ அல்லது கூலித் தொழிலோ செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.