சென்னை: உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் நமது நாட்டிலோ, பிற வெளிநாடுகளிலோ மருத்துவக் கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள் மத்திய அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளின் அடிப்படையில், அவர்களது எதிர்கால மருத்துவக் கல்விக்கான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்று தமிழக பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு , பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > தரமான மருத்துவ வசதிகளை மாவட்ட அளவில் வழங்குவதற்காகவும், முக்கியத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் 19 அரசு மருத்துவமனைகளை புதிய மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்திட அரசு முடிவு செய்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் 1,019 கோடி ரூபாய் செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
> உலகளாவிய நோய்த்தாக்க ஆய்வின்படி, மன அழுத்தம், பதற்றம்,மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, தமிழகத்தில் மனநல மருத்துவப் பயிற்சி பெற்ற மனித வளத்துடன் மனநோய் சிகிச்சைகட்டமைப்பை வலுப்படுத்துவது இன்றியமையாதது. இத்தகைய உயர்தர மனநலச் சேவைகளை வழங்குவதற்காக, கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை (IMH), தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS) என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும்.
> காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1969-ம் ஆண்டு அமைக்கப்பட்டு, 290 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனை தற்போது 500 படுக்கை வசதிகளுடன் 120 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை, 750 படுக்கை வசதிகளுடைய, தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக மேலும் தரம் உயர்த்தப்படும். இப்பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி மற்றும் தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
> தற்போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு, தமது மருத்துவக் கல்வியைத் தொடர இயலாமல் தாயகம் திரும்பியுள்ள நமது மாணவ மாணவியர் அனைவரும் தமது மருத்துவக்கல்வியை தொடருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். இந்த மாணவர்கள் நமது நாட்டிலோ, பிற வெளிநாடுகளிலோ மருத்துவக் கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள் மத்திய அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளின் அடிப்படையில், அவர்களது எதிர்கால மருத்துவக்கல்விக்கான அனைத்து உதவிகளையும் இந்த அரசு வழங்கும்.
> தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திற்கு 1,906 கோடி ரூபாயும், அவசர ஊர்தி சேவைகளுக்கு 304 கோடி ரூபாயும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 817 கோடி ரூபாயும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,547 கோடி ரூபாயும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 17,901.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றார் மகாகவி. ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1989-ம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது. மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது.
> தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு , பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> ஈவேரா மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
> செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம்” அமைக்கப்படும். இம்மையத்தில், குழந்தைகள் மற்றும் மகளிரின் நலன், உரிமைகள், மேம்பாடு, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக சமூகநலத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
> ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2,542 கோடி ரூபாயும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு 1,949 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 5,922.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.