தமிழக அரசின் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 
தமிழகம்

தமிழக பட்ஜெட் 2022-23: சென்னை வெள்ள பாதிப்புகளைத் தடுக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாத தமிழக பட்ஜெட் 2022-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையில் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > அரசு நிலங்களில் நில அளவைப் பணிகள் துல்லியமாகவும் எளிதாகவும் மேற்கொள்ள, “தொடர்ந்து இயங்கும் தொடர்பு நிலையங்களின் (Continuously Operating Reference Stations)அமைப்பு” வலுப்படுத்தப்படும். நவீன முறையில் நிலஅளவைப் பணிகளை மேற்கொள்ள நில அளவையர்களுக்கு “ரோவர்” (Rover Machine) கருவிகள்வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

> பரவலான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அரசு நிலங்களின் பயன்பாடு அமைவது அவசியம். அரசு நிலங்களின் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், அரசு நிலங்களை நியாயமான, வெளிப்படையான முறையில் குத்தகைக்கு விடுவதற்கும் ஒரு விரிவான நிலக்குத்தகைக் கொள்கை வகுக்கப்படும்.

> நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை மீட்டெடுக்கவும், பாதுகாப்பதற்கும் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. அரசு நிலங்களைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு,தக்க பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளின்படி, வெள்ளத்தடுப்புப் பணிகள் முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இப்பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> வானிலையைத் துல்லியமாகக் கணிக்க,“பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை” மேம்படுத்துவதன் அவசியத்தை,அண்மையில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்தியுள்ளது. பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் (super computers)உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை அரசு உருவாக்கும். இப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளோரின் நலனிற்காக அரசால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக 4,816 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> இம்மதிப்பீடுகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 7,474.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT