பர்கூரில் தோற்றதுபோல ஆர்.கே.நக ரில் ஜெயலலிதா தோல்வியை சந்திப் பார் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உறுதிபட கூறினார்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த 19-ம் தேதி முதல் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று காலை 11 மணிக்கு தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனை அருகில் ஆர்.கே.நகர் தொகுதி திமுக தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். அப்போது அன்பழகன் பேசியதாவது:
திமுக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமக ளான சிம்லா முத்துச்சோழன், ஜெயலலி தாவை எதிர்த்து போட்டியிடுவதாக எல்லோரும் சொல்கிறார்கள். அது தவறு. சிம்லாவை எதிர்த்துதான் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
ஆர்.கே.நகரில் யாரை நிறுத்தலாம் என்ற பேச்சு வந்தபோது சிம்லாவை கருணாநிதி தேர்வு செய்தார். அவரது தேர்வு ஒருபோதும் சோடை போகாது. சிம்லா பார்ப்பதற்கு பள்ளிக்கூட மாணவி போல இருக்கிறார். இந்தத் தொகுதி மக்களோடு இருப்பவர். கடும் உழைப்பாளி. எனவே, அவர் வெல்வது நிச்சயம்.
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சி யில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. எந்தத் துறையிலும் முன்னேற்றம் இல்லை. மக்கள் மாற்றத்துக்காக மே 16-ம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். எனவே, 1996-ல் பர்கூரில் தோற்ற ஜெயலலிதா, 2016-ல் ஆர்.கே.நகரில் தோற்பது உறுதி. இடைத்தேர்தலைப் போல இப்போது அவர் மக்களை ஏமாற்ற முடியாது. திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை மக்களிடம் சொல்லி திமுகவினர் அனைவரும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
தண்டையார்பேட்டை திருவொற்றி யூர் நெடுஞ்சாலையில் உள்ள ஜெய கிறிஸ்தவ தேவாலயம் திமுக தேர்தல் பணிமனையாக மாற்றப்பட்டுள்ளது.