அரியலூர்: அரியலூரை அடுத்த மல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோ.விஜயகுமார்(52). முன்னோடி விவசாயியான இவர், தன்னுடைய முயற்சியில் கரும்பு பயிரில் மறுதாம்பு சாகுபடி செய்வதற்கு உதவும் வகையில் கலப்பை இயந்திரம் ஒன்றை கடந்த 3 ஆண்டுகளாக வடிவமைத்து வந்தார்.
இந்நிலையில், முழுமையாக வடிவமைக்கப்பட்ட அந்த இயந்திரத்தின் செயல்விளக்கத்தை பார்ப்பனச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு வயலில் மாவட்ட வேளாண் பொறியியல் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று செய்து காண்பித்தார்.
டிராக்டரின் உதவியுடன் இயங்கும் இந்த கலப்பையை, கரும்பு மறுதாம்பு (கட்டை பயிர்) பயிரில் அளவுக்கு அதிகமாக தூர்கள் வருவதை வெட்டி எடுக்கும் வகையிலும்,மேற்பரப்பில் கரும்பு கட்டையுடன் சேர்த்து மண்ணையும் 3 முதல்4 அங்குலம் வரை சீவி எடுக்கும் வகையிலும் வடிவமைத்துள்ளார். இந்தக் கருவியைப் பயன்படுத்தும்போது, புதிதாக முளைத்து வரும் கரும்புப் பயிர் திடகாத்திரமாகவும், ஒரே அளவிலும் இருப்பதால் கரும்பில் சர்க்கரை சத்து அதிகம் காணப்படுவதாக விஜயகுமார் கூறினார்.
மேலும், கரும்பு மறுதாம்பு பயிரிடும்போது தேவையற்ற மண்ணை வெட்டி எடுக்காமல் விடுவதால், முழுமையான வளர்ச்சியை பெறாமல் கரும்பு குன்றிவிடும். எனவே, ஒவ்வொரு முறை கரும்பு அறுவடைக்குப் பிறகும் இந்த கலப்பையைக் கொண்டு பயிரை உழவு செய்தால், 6 முதல் 7 முறை மறுதாம்பு கரும்பு பயிர் செய்ய முடியும். இதனால், கரும்பு விளைச்சலும் அதிகமாக இருப்பதுடன், ஆட்களைக் கொண்டு கரும்பு மறுதாம்புக்கு செய்யப்படும் செலவைவிட இயந்திரத்தின் மூலம் செய்யப்படும் வேலையால் செலவு பெரும்பாலும் குறைகிறது என விளக்கம் தந்தார்.
இந்த செயல்விளக்க நிகழ்வை வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் வ.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் நெடுமாறன் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்.
இதேபோல, கடந்த வாரம் அஸ்தினாபுரம் கிராமத்தில் நடைபெற்ற செயல்விளக்கத்தை வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி, சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத் தலைவர் அழகுகண்ணன், வேளாண் தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
கரும்பு அறுவடை செய்த பிறகு மறுதாம்புக்கு வயலை தயார் செய்யும்போது, கரும்பு கட்டைகளை சீவி எடுப்பதற்கும், கரும்பு தூர்களில் இருபுறமும் அணைக்கப்பட்ட மண்ணை ஒவ்வொரு புறமாக குறைப்பதற்கும் தனித்தனி கருவிகள் ஏற்கெனவே உள்ளன.
ஆனால், இந்தக் கருவி கரும்பு கட்டைகளை சீவி எடுப்பது, இருபுறமும் அணைக்கப்பட்ட மண்ணை குறைப்பது ஆகிய பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.