நடமாடும் மருத்துவ சேவை வாகனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எம். பாலச்சந்திரன் ஐபிஎஸ், (பணிஓய்வு) கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
தமிழகம்

ஏழை மக்களுக்கான நடமாடும் மருத்துவ சிகிச்சை மையம்: சிஎஸ்ஆர் திட்டத்தில் தனியார் நிறுவனம் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசதி குறைவான ஏழை, எளிய மக்களுக்காக நடமாடும் மருத்துவ சிகிச்சை மையம் திட்டத்தை வோக்ஹார்ட் ஃபவுண்டேஷனுடன் இணைந்து ஹெச்டிஎல் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட தகவல்: 2021-2022 நிதியாண்டிலிருந்து செயல்படத் தொடங்கும் இத்திட்டம், 3 ஆண்டுகள் கால அளவில் மொத்தம் 1.05 கோடி ரூபாய் செலவீன மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 25,000 பேருக்கு இச்செயல் திட்டம் பயனளிக்கவுள்ளது. நோயறிதல் மற்றும் பரிசோதனையகத்திற்குத் தேவைப்படும் சாதனங்கள், வேதிப்பொருட்கள் மற்றும் மருந்துகளோடு நடமாடும் மருத்துவ வாகனமும் இச்செயல்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, மற்ற 6 நாட்களிலும், தினசரி அடிப்படையில் காலை 9 மணியிலிருந்து, மாலை 4 மணி வரை செயல்படும் இந்த நடமாடும் மருத்துவ வாகனத்தில் ஒரு மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் பரிசோதனையக தொழில்நுட்ப பணியாளர் ஆகியோர் பணியாற்றுவார்கள்.

ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மருத்துவ சிகிச்சைத் தேவைப்படும் மக்களுக்கு அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதற்காக வோக்ஹார்ட் ஃபவுண்டேஷனுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த பெருநிறுவன சமூக பொறுப்புறுதி செயல்திட்டத்தை நீட்டிக்கவும் ஹெச்சிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஹெச்சிஎல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், ஹெச்எஃப்சிஎல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனருமான மகேந்திர நஹாட்டா கூறியது: "அடிப்படை சுகாதார சிகிச்சைகளுக்கு அணுகுவசதி இல்லாத அல்லது குறைவான வசதியைக் கொண்டிருக்கின்ற ஏழை, எளியவர்களை இச்சேவை சென்றடையுமாறு செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும். நாட்டிற்கு சேவையாற்றுவதற்கான எமது பொறுப்புறுதியில் சிறிதும் தளராமல், உறுதியோடு நிலைத்திருப்பதும் எமது குறிக்கோளாகும்" என்று அவர் கூறினார்.

இதுகுறித்து வோக்ஹார்ட் ஃபவுண்டேஷனின் மருத்துவ இயக்குனர் டாக்டர். ஆர். ஸ்ரீராம் கூறியது: "சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வசதியற்ற, ஏழை எளிய சமூகங்களுக்கு சிறந்த அடிப்படை சுகாதார வசதியை வழங்குவதற்கு இச்செயல்திட்டத்தின் வழியாக வோக்ஹார்ட் ஃபவுண்டேஷனும், ஹெச்எஃப்சிஎல்லும் ஒருங்கிணைந்து செயல்படும்" என்று அவர் கூறினார்.

கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஹெச்டிஎல் நிறுவனத்தின் வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எம். பாலச்சந்திரன் ஐபிஎஸ், ADGP (பணிஓய்வு) , இத்திட்டத்தின் ஒரு அங்கமான நடமாடும் மருத்துவ வாகனத்தின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஹெச்எஃப்சிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவருமான மகேந்திர நகாட்டா, புதுடெல்லியிலிருந்து இந்நிகழ்வில் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றார். ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஜி.எஸ். நாயுடு, ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிர்வாக உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT