கல்வி கற்பித்தலில் தொழில் நுட்பத்தை சிறப்பாக பயன்படுத் தியதற்காக ஐசிடி தேசிய விருதை புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியை ரேவதி பெற்றுள்ளார்.
மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல், கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பக் கலை மூலம் கற்பிப்பவர்களுக்கு இந்த ஐசிடி விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் என்சிஇஆர்டி சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐசிடி விருது மத்தியக் கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஈடானது என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா காலமாக இருந்ததால் நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள் இணைய வழியில் நடைபெற்ற தேர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் கற்பித்தல் மாதிரி களை விளக்கினர்.
புதுச்சேரி பிள்ளையார் குப்பம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை ரேவதி 2019-ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் டெல்லியில் நடந்த விழாவில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி இவ்விருதை வழங்கினார்.
விருது பெற்ற ஆசிரியை ரேவதி கூறுகையில், "பொம்மை மூலம் வகுப்பு எடுப்பதை மாற்றி, தொழில்நுட்பத்தின் மூலம் பொம்மைகளை உருவாக்கி, அதை வீடியோவாக்கினேன். குறிப்பாக அனிமேசன் பொம்மை மூலம் ஆங்கிலப் பாடம், பொதுஅறிவு என வீடியோ உருவாக்கினேன். இம்மாதிரியாக கல்வியில் தொழில் நுட்பத்தை புகுத்தியதால் புதுச்சேரி கல்வித்துறை என்னை விருதுக்கு பரிந்துரைத்தது. அதையடுத்து ஐசிடி தேசிய விருது கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டார்.