தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்குமார்(30). இவர், சென்னை கானாத்தூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி(24) என்பவருக்கும் தஞ்சாவூரில் நேற்று திருமணம் நடைபெற்றது.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு மோகன்குமாரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது, மோகன்குமாரின் பள்ளி நண்பர்கள் ஒன்றிணைந்து திருக்குறள், அக்னிச் சிறகுகள், காமராஜரின் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பன உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை தட்டுகளில் வைத்து, மேளம், தாளம் முழங்க சீர்வரிசையாக கொண்டுவந்து, மணமக்களுக்கு வழங்கினர். புத்தக சீரை பெற்றுக்கொண்ட மணமக்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மோகன்குமாரின் நண்பர்கள் கூறியபோது, “தற்போது புத்தக வாசிப்பு குறைந்துக்கொண்டே வருகிறது. ஓய்வு நேரங்களில்கூட, செல்போனை பார்க்கும் சூழல்தான் உள்ளது. எனவே, மீண்டும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் புத்தகங்களை சீர்வரிசையாக வழங்கினோம்” என்றனர்.