மாணவிகள் தங்களால் முடிந்த அளவுக்கு சமுதாயத்துக்கு பங் களிக்க வேண்டும் என வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா தெரி வித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா பேசும்போது, ‘‘பெண்கள் நல்லதொரு மாற்றம் கொண்டு வரக்கூடியவர்கள். இந்த மாற்றத்தால் உலகம் முழுவதும் மகிழ்ச்சி, நல்லெண்ணங்கள் மேலோங்கி இருக்கும். மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அதிகாரம் குறித்து பேசி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாணவிகள் தங்களால் முடிந்த அளவுக்கு சமுதாயத்துக்கு சிறப்பாக பங்களிக்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் திருப்பதி கூடுதல் எஸ்பி (நிர்வாகம்) சுப்ரஜா எடப்பள்ளி கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசும்போது, ‘‘பெண்கள் நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள் மற்றும் உரிமை களை நன்றாக தெரிந்து வைத் திருக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கான சட்ட உரிமைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக பங்கேற்ற அண்ணா பல்கலைக்கழக பேராசிரியரும், விஐடி முன்னாள் மாணவியுமான பேராசிரியர் இந்துமதி பேசும் போது, ‘‘பெண்கள் படித்தால் அவர்களுக்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறையினருக்கும் பயனளிக்கும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய விஐடி வேந்தர் கோ.விசுவ நாதன் பேசும்போது, ‘‘விஐடி பெண்களுக்கான விடுதிகளின் பெயர்கள் டாக்டர் முத்துலட்சுமி, அன்னை தெரசா, இந்திராகாந்தி, ஆங்சான் சூகி, மேரி கியூரி என உள்ளன. இவர்களின் வரலாறுகளை மாணவிகள் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மனதில் உத்வேகம் பிறக்கும். அவர்களைப் போன்று மாணவிகளும் வாழ்க்கையில் சாதித்து சிறந்த தலைவர்களாக உருவாக முடியும்.
உலக அளவில் பல்வேறு வேலைகளில் சுமார் 60 சதவீதம் பெண்கள் உள்ளனர். உணவு உற்பத்தியில் 50 சதவீதம் பெண்கள் வேலை செய்கின்றனர். இவ்வளவு இருந்தாலும் மொத்தம் 10 சதவீதம் பேர்தான் சம்பளம் பெறுகின்றனர். பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உயர் கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், துணை வேந்தர் ராம்பாபு கோடாளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.