தமிழகம்

கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு தேர்தலில் பதிவான வாக்குகளை வழக்கறிஞர் ஆணையர் முன்னிலையில் மீண்டும் எண்ண உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கல்லலை சேர்ந்த சரஸ்வதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 30.12.2019-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 9-வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்டேன். 2020 ஜன.2-ல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளரை விட கூடுதலாக 34 வாக்குகள் நான் பெற்றிருந்தேன். முடிவு அறிவிக்கப்போகும் நேரத்தில் அதிமுகவினர் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழைந்து தேர்தல் அதிகாரிகளை பகிரங்கமாக மிரட்டினர்.

பின்னர் அதிமுக வேட்பாளர் 3 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதனால் மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் தீர்ப்பாயத்தில் மனு அளித்தேன். எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதை ரத்து செய்து மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, வாக்கு சீட்டுகள், வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவுகளை பாதுகாப்பாக வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.ஆனந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நீதிமன்ற ஆணையராக வழக்கறிஞர் ஜி.மோகன் குமார் நியமிக்கப்படுகிறார். அவர் முன்னிலையில் 9-வது வார்டு தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். மறு வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். அது தொடர்பாக ஏப். 11-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT