தமிழகம்

கடலோர மாவட்டங்களில் 18, 19-ம் தேதிகளில் மழை வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 18, 19-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 17-ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 18, 19-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று (மார்ச் 16) பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT