திருவாரூர்: திருவாரூரில் பிரசித்தி பெற்றதியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி கோஷத்துடன் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில், சைவ சமய தலைமை பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது சைவ சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்ட விழா நடத்தப்படுகிறது. இத்தேரோட்டம் ஆயில்ய நட்சத்திரத்தில்தான் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பல்வேறு காரணங்களால் 28 ஆண்டுகளாக பல்வேறு நாட்களில் நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆயில்ய நட்சத்திரத்தில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
கொடியேற்றம்
இக்கோயிலில் பங்குனி உத்திரவிழா, கடந்த பிப்.20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தியாகராஜர் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டத்துக்காக நேற்றுமுன்தினம் இரவு, தியாகராஜர் அஜபா நடனத்துடன் யதாஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஆழித்தேரில் எழுந்தருளினார்.
முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பாலாம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமிகள்தனித்தனித் தேர்களில் எழுந்தருளினர். ஆழித்தேரோட்டத்துக்கு முன்பாக நேற்று அதிகாலை விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் நிலையிலிருந்து புறப்பட்டு தேரோடும் வீதிகளை வலம் வந்தன.
ஆழித்தேரோட்டம்
இதைத் தொடர்ந்து ஆழித்தேரோட்டம் காலை 8.10 மணியளவில் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர். முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர் ல சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், எஸ்.பி விஜயகுமார், எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆழித்தேரானது கீழவீதியில் உள்ள நிலையடியில் இருந்து தொடங்கி தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக நேற்றுமாலை நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் சிவ வாத்தியங்களை இசைத்தும், தேவாரப் பாடல்களை பாடியும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து சண்டிகேஸ்வரர், நீலோத்பாலாம்பாள் தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து தேரோடும் வீதிகளில் வலம் வந்து நிலைக்கு கொண்டு வந்தனர்.
ஆழித்தேர் ஏறத்தாழ 300 டன் எடை கொண்டது என்பதால், தேரை பின்னிருந்து தள்ளுவதற்கும், வீதிகளில் திருப்புவதற்கும் 4 புல்டோசர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வீதிகளின் திருப்பங்களில் தேரை திருப்புவதற்கு இரும்பு பலகைகளை வைத்து, அதில் கிரீஸ் தடவி, அதன் மேல் ஒருபக்க தேர் சக்கரத்தை வைத்து, திருப்பினர். இந்த பணியில் திருச்சி பெல் நிறுவனத்திலிருந்து வந்திருந்த பொறியாளர்கள் ஈடுபட்டனர். தேர் ஒவ்வொரு வீதியிலும் நின்று அசைந்தாடி திரும்பும் அழகை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
தேரோட்டத்தை சீராக கொண்டு செலுத்த 600-க்கும் மேற்பட்ட முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டன. திருவாரூர் எஸ்பி விஜயகுமார் தலைமையில் 4 கூடுதல் எஸ்பிக்கள், 14 டிஎஸ்பிக்கள் என சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.