தமிழகம்

ஏர் கனடா விமான நிறுவனத்தின் அலட்சியத்தால் 90 ஆண்டு பழமையான வீணை சேதம்: தமிழக வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா வேதனை

செய்திப்பிரிவு

ஏர் கனடா விமான நிறுவனத்தின் அலட்சிய போக்கால் தமிழக வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா வின் 90 ஆண்டுகள் பழமையான வீணை சேதமடைந்துள்ளது.

‘நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவ துண்டோ’ என்று கேள்வி எழுப்பி னார் பாரதி. அந்த வீணையின் தனித் தன்மையை அறியாத ஏர் கனடா விமான நிறுவனம், வீணையை உடைத்து சேதமாக்கியுள்ளது.

கடந்த மார்ச் 31-ம் தேதி இசைக் கச்சேரிக்காக கனடாவின் டல்லஸ் நகரில் இருந்து எட்மண்டன் நகருக்கு ‘ஏர் கனடா’ விமானத்தில் ராஜேஷ் வைத்யா பயணம் செய்தார். அவர் தனது வீணையை பத்திரமாக பேக்கேஜ் செய்து கொண்டு சென்றார்.

ஆனால் விமான நிறுவனத்தின் அலட்சியத்தால் அந்த வீணை காணாமல் போனது. பின்னர் ஏப்ரல் 6-ம் தேதி காணாமல் போன வீணையை ராஜேஷ் வைத்யாவிடம் ‘ஏர் கனடா’ திரும்ப ஒப்படைத்தது. ஆனால் அந்த வீணை மோசமாக சேதமடைந்திருந்தது. வீணை வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கு எவ்வித சேதமும் இல்லை.

பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் வீணை மட்டும் எப்படி சேதமடைந்தது என்பதற்கு ‘ஏர் கனடா’வால் பதில் அளிக்க முடியவில்லை.

தற்போது அமெரிக்காவில் உள்ள வைத்யா, ‘தி இந்து’விடம் கூறியதாவது: வீணை சேதம் அடைந்தது தொடர்பாக ஏர் கனடா நிர்வாகத்தினர் என்னை அழைத்துப் பேசினர்.

எந்த வழியில் இழப்பீடு தர வேண்டும், வாடகைக்கு வாங்கினால் அதற்கு எவ்வளவு தொகை ஆகுமோ அதை கொடுக்கத் தயார், புது வீணை வாங்கித் தரவும் தயார் என்று தெரிவித்தனர். அவர்கள் என்னை சமாதானம் செய்தது ஏற்புடையதாக இல்லை.

90 ஆண்டு கால வீணை அது. அதற்கு ஈடாக வேறு எந்த வீணையும் சமமாகாது. அதில் ஒலிக்கும் நாதம் இணையற்றது. மிகவும் பத்திரமாக பெட்டிக்குள் வைத்து விமானத்தில் கொண்டு சென்றேன். பெட்டி பத்திரமாக உள்ள நிலையில் உள்ளே இருந்த வீணை மட்டும் எப்படி சேதம் அடைந்தது? இது புரியாத புதிராக உள்ளது. இதுதான் ஏர் கனடா நிறுவன சேவையின் தரமா என்கிற ஆத்திரம் பொங்கி எழுகிறது.

ஒரு தாய் பாலூட்டி அன்பு காட்டி அரவணைத்து வளர்க்கும் குழந்தை காணாமல் போனால் வேறு குழந்தை வாங்கிக் கொள் என்று சொல்வது போல ஏர் கனடா சொல்லும் சமாதானம் அமைந்துள்ளது.

அமெரிக்காவில் இசைக் கலைஞர் ஒருவருக்கு இதே போன்ற கசப்பான அனுபவம் ஏற்பட்டிருந்தால் அது நாடு தழுவிய போராட்டமாக வெடித்திருக்கும்.

எனது வேதனையை உலகெங் கும் வாழும் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இதை சொல்லுகிறேன். சேதம் அடைந்த வீணைக்கு எப்படி, எந்த வழியில் இழப்பீடு வாங்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இதை ஏர்லைன்ஸ் நிர்வாகத்திடம் தெளிவாகத் தெரிவித்துவிட்டேன்.

இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.

SCROLL FOR NEXT