திருப்பூப் மாவட்டம் உடுமலைஅருகே கல்லாபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட வேல் நகர், கெம்பே கவுண்டந்துறை எனும் கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளாக அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30 குழந்தைகள் படிக்கின்றனர்.
இதே பள்ளியில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணிபுரிந்தவர் அசோக்குமார் (45). இவர், 6 ஆண்டுகளுக்கு முன் குழிப்பட்டி எனும் மலை கிராமத்துக்கு தலைமையாசிரியராக பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாறுதல் பெற்று சென்றார். அதன் பிறகு, மற்றொரு மலை கிராமமான கோடந்தூரில் பணிபுரிந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற கவுன்சிலிங் மூலமாக பணியிட மாறுதல் பெற்று, தற்போது திருமூர்த்தி நகர் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், முன்னர் பணிபுரிந்த கெம்பேகவுண்டந்துறை கிராமத்துக்கே பணியிட மாற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பள்ளிக்கு தேவனூர்புதூர், மயிலாடும்பாறை எனும் கிராமத்தில் பணிபுரிந்த விமலா எனும் ஆசிரியை, தலைமையாசிரியராக பணியிட மாறுதலில் பொறுப்பேற்றுள்ளார். கடந்த 1-ம் தேதி முதல் அங்கு பணிபுரிந்து வருகிறார்.
இதற்கிடையே ஆசிரியர் அசோக்குமாரை மீண்டும் கெம்பேகவுண்டன் துறை பள்ளிக்கு நியமிக்க வேண்டுமென, பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி, கடந்த 10 நாட்களாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "இப்பள்ளியில் பயின்ற பலரும் உயர் கல்வியைகூட தாண்டுவதில்லை. ஆனால், அசோக்குமார் பணிபுரிந்தபோது உயர் கல்வி மாணவர்களுக்கு மாலையில் டியூசன் எடுத்தார். உயர் கல்வி செல்ல வழிகாட்டினார். அதனால் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துள்ளனர். எனவே, அதே ஆசிரியரை மீண்டும் பள்ளிக்கு நியமிக்க வேண்டும்" என்றனர்.
சிலரின் தூண்டுதல்?
சக ஆசிரியர்கள் கூறும்போது, "எந்தவொரு ஆசிரியரும் ஒரே இடத்தில் பணியாற்றுவது சாத்தியமில்லை. 6 ஆண்டுகளுக்கு பின்பு திடீரென மக்கள் போராட்டம் நடத்துவதற்கு பின்னால், சிலரது தூண்டுதல் இருக்கலாம்.
இதே போராட்டத்தை கிராம மக்கள் கவுன்சிலிங்நடக்கும் முன்பாக செய்திருக்கலாம். உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தால் கிராம மக்கள் ஆசைப்படுவதை போலவே நடந்திருக்க வாய்ப்புள்ளது. இது போன்ற போராட்டங்கள் எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணங்களை உருவாக்கிவிடும். எனவே, கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
பள்ளியில் ஆய்வு
மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமியிடம் கேட்டபோது, "பிரச்சினைக்குரிய பள்ளியில் நேற்று ஆய்வு நடைபெற்றது. பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்றார்.