ஹிஜாப் தடை செல்லும் என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை புதுக் கல்லூரியில் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள். 
தமிழகம்

ஹிஜாப் தடை செல்லும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து புதுக் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டதடை செல்லும் என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.

இதைக் கண்டித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று உள்ளிருப்புப் போராட்டம் மற்றும்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஹிஜாப்பை தடை செய்யாதே என்று கோஷமிட்டதுடன், நீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பும் கோஷமெழுப்பினர்.

மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். காலை 11.30 மணியளவில் போராட்டத்தைத் தொடங்கிய மாணவர்கள், மதியம் ஒரு மணியளவில் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT