கோவை: கோவை அருகே வீட்டில் மின் கசிவால் புகைமூட்டம் ஏற்பட்டதில், தாய், 2 மகள்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியைச்சேர்ந்தவர் ஜோதிலிங்கம். இவரதுமனைவி விஜயலட்சுமி(58), மகள்கள் அர்ச்சனா(24), அஞ்சலி(22). கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் ஜோதிலிங்கம் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். அர்ச்சனா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலும், அஞ்சலி நிதி நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். மகள்களுடன் விஜயலட்சுமி வசித்து வந்தார். நேற்றுகாலை இவர்களது வீட்டுக்கதவுநீண்டநேரமாகியும் திறக்கப்படவில்லை. வீட்டிலிருந்து புகை வெளியேறிக் கொண்டிருந்தது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவருகே சென்று பார்த்தபோது, உள்ளே புகை சூழ்ந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையம் மற்றும் கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தீயை அணைத்தனர். சமையல் அறையில் விஜயலட்சுமியும், மூத்தமகள் அர்ச்சனாவும், மற்றொரு அறையில் இளைய மகள் அஞ்சலியும் உயிரிழந்து கிடந்தனர். மேலும், வீட்டில் வளர்க்கப்பட்டுவந்த வளர்ப்பு நாயும் இறந்து கிடந்தது.
3 பேரின் சடலங்களையும் போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், வீட்டில் இருந்த யு.பி.எஸ்-ல் மின் கசிவு ஏற்பட்டதும், அதிலிருந்து வெளியேறிய நச்சுப்புகையால் விஜயலட்சுமி, அர்ச்சனா, அஞ்சலி மற்றும் வளர்ப்பு நாய் மூச்சுத்திணறி உயிரிழந்ததும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.