தமிழகம்

சத்தீஸ்கரில் கண்ணிவெடிக்கு தமிழக வீரர் பலி: கருணாநிதி இரங்கல்

செய்திப்பிரிவு

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி பலியான தமிழகத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ காவல் படை வீரர் விஜயராஜ் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ''சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படை துணை ஆய்வாளர் விஜயராஜ் பலியாகியுள்ளார்.

விஜயராஜ் தலைமையில் 7 காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்ணிவெடியை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

விஜயராஜின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடமையாற்றும் போது பலியான விஜயராஜ் மற்றும் 7 காவலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலியானவர்கள் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT