காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக தந்த ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக் கவசத்தைக் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று அணிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.5 கோடி மதிப்பில் வைரம், வைடூரியம், மரகதக் கற்கள் பதித்த தங்கக் கவசத்தைக் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
அதைக் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்தில் வைத்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்புப் பூஜைகள் செய்தார். பின்னர், தங்கக் கவசம் சிம்மாசனத்தில் வைக்கப்பட்டு சங்கர மடத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னர் காமாட்சி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமாட்சி அம்மனுக்குத் தங்கக் கவசத்தை அணிவித்து சிறப்புத் தீபாராதனைகளைச் செய்தார்.
இந்த ஊர்வலத்திலும் தங்கக் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியிலும் ஹைதராபாத்தைச் சேர்ந்தஉபயதாரர், அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த கிரி, தொழிலதிபர்கள் மும்பை சங்கர், புனே காலே, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி உட்படப் பலர்பங்கேற்றனர்.
இந்த ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளைக் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் செய்திருந்தார்.