தமிழகம்

சேலம் கோ-ஆப்டெக்ஸில் பட்டுத் திருவிழா தொடக்கம்: பழைய பட்டுச் சேலைகளை மாற்றவும் சலுகை

செய்திப்பிரிவு

சேலம் கோ-ஆப்டெக்ஸ் பட்டு விற்பனை நிலையத்தில் தள்ளுபடி சலுகையுடன் கூடிய பட்டுத் திருவிழா தொடங்கியது. இதில், பழைய கிழிந்த பட்டுச் சேலைகளை கொடுத்து அதன் மதிப்புக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் புதிய பட்டுச் சேலைகள் வாங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் சின்னக்கடை வீதி கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் பட்டுத் திருவிழா விற்பனையை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள் கூறியதாவது:

வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் பட்டுத் திருவிழாவில் 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் அரசுத் தள்ளுபடி ரூ.200-ம் இணைந்து பட்டுச் சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனித்திறன் மிக்க நெசவாளர்களால் நெய்யப்பட்ட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான பட்டு சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பழைய கிழிந்த பயன்படுத்த முடியாத வெள்ளி ஜரிகை பட்டுச்சேலைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான விலை அல்லது அத்தொகையுடன் கூடுதல் தொகையை செலுத்தி புதிய பட்டுச் சேலைகளை மக்கள் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் பாலமுருகன், மேலாளர் ஞானப்பிரகாசம், துணை மண்டல மேலாளர் சுப்பிரமணியன், தங்கம் பட்டு மாளிகை மேலாளர் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT