சேலம் கோகுல நாத இந்து மகாஜன பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி, ரூ.3 கோடி மதிப்பில் புதுப்பிக்க முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் கடந்த 1928-ம் ஆண்டு கோகுல நாத இந்து மகாஜனபள்ளி தொடங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (14-ம் தேதி) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவரும், சேலம் எம்பியுமான பார்த்திபன் (திமுக) மற்றும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களை, முன்னாள் மாணவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
இதுதொடர்பாக முன்னாள் மாணவர்கள் கூறும்போது, “நாங்கள் படித்த எங்கள் பள்ளி நூற்றாண்டை நெருங்குவதை முன்னிட்டு, பள்ளியை சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்து எதிர்கால தலைமுறைக்கு பள்ளியின் பெருமையை எடுத்துச் செல்லவும், நினைவு சின்னமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது”என்றனர்.