தமிழகம்

சென்னை அருகே குன்றத்தூரில் தாய், மகளை கொன்று நகை, பணம் கொள்ளை: வேலைக்கார பெண் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

குன்றத்தூரில் தாய், மகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நகை, பணம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

சென்னை குன்றத்தூர் இரண்டாம் கட்டளை பெஸ்லி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா(64). இவரது மகள் தேன்மொழி(32). வீட்டருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்தார். தேன்மொழியின் கணவர் ராமசாமி (40) ஏமன் நாட்டில் பணிபுரிகிறார். இவர்களுக்கு சுரபிஸ்ரீ(7), குணஸ்ரீ (9 மாதம்) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று அதிகாலையில் தேன்மொழியின் வீட்டை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. வசந்தா கதவை திறக்க, மறைந்திருந்த கும்பல் அவரை நெஞ்சில் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தது.

சத்தம் கேட்டு தேன்மொழி எழுந்துவர அவரையும் அந்த கும்பல் முதுகு, கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தது. இதை பார்த்து அழுது கொண்டிருந்த 7 வயதே ஆன சுரபிஸ்ரீயின் கழுத்தையும் அந்த கும்பல் அறுத்துள்ளது. பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து சுமார் 50 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றது.

கழுத்தில் வெட்டுக் காயத்துடன், மயங்கிக் கிடந்த சுரபிஸ்ரீ, காலை 6 மணியளவில் மயக்கம் தெளிந்து, தங்கை குணஸ்ரீயை தூக்கிக்கொண்டு, பக்கத்து வீட்டுக்கு ஓடிச் சென்றிருக்கிறார். ரத்தம் வடிய ஓடி வந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று பார்த்தபோது, வசந்தாவும் தேன்மொழியும் கொலை செய்யப் பட்டு கிடப்பதும், வீட்டில் கொள்ளை நடந்திருப்பதும் தெரியவந்தது. உடனே குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுரபிஸ்ரீ போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அம்பத்தூர் துணை ஆணை யர் சுதாகர், பூந்தமல்லி உதவி ஆணையர் ஐயப்பன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வசந்தா, தேன்மொழி இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த இடத்துக்கு அருகே கட்டப் பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் அருகே சென்று படுத்துக்கொண்டது.

கொலைகாரர்கள் இந்த கட்டிடம் அருகே வந்து உடைகளை மாற்றிக்கொண்டு, தப்பிச் சென்று இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர். இந்த கட்டிட கட்டுமானப் பணியில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் யாராவது இந்த கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்தது.

கணவன், மனைவி போல இருவர், நேற்று வசந்தாவின் வீடு அருகே வந்து சென்றதை சிலர் பார்த்துள்ளனர். அவர்களுக்கும் கொலைக்கும் தொடர்பு இருக் குமோ என்ற சந்தேகமும் ஏற்பட் டது. கொலைகாரர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

வேலைக்கார பெண் உட்பட 3 பேர் கைது

தேன்மொழி வீட்டில் சத்யா என்ற பெண் வீட்டு வேலைகளை செய்து வந்தார். தேன்மொழி வீட்டில் நகை, பணம் இருப்பதை அறிந்த சத்யா, அதை தனது கணவர் ஜெயக்குமாரிடம் கூறியதோடு, அவற்றை கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, சத்யா, ஜெயக்குமார் மற்றும் அவரது கூட்டாளி தவ்லத் ஆகிய 3 பேர் நேற்று அதிகாலையில் தேன்மொழியின் வீட்டுக்குச் சென்றதாகவும், சத்யாவின் குரல் கேட்டதால் வசந்தா கதவை திறந்ததாகவும் தெரிகிறது.

உடனே உள்ளே நுழைந்த ஜெயக்குமார், தவ்லத் ஆகியோர் சேர்ந்து வசந்தா, தேன்மொழி, சுரபிஸ்ரீயை கத்தியால் குத்தியதோடு நகை, பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பியதாக கூறப்படுகிறது.

மயக்கம் தெளிந்து எழுந்த சுரபிஸ்ரீ, வேலைக்கார பெண்ணுடன் 2 பேர் வந்து கத்தியால் குத்தியதை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூறியிருக்கிறார். அவர்கள் இந்த தகவலை போலீஸிடம் கூற, சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் சத்யா, ஜெயக்குமார், தவ்லத் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். தேன்மொழி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT