வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த 2 மாதம் கால அவகாசம் அளிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதால், வேலைநிறுத்த திட்டத்தை வாபஸ் பெறுவது பற்றி இன்று முடிவு செய்யப்படுகிறது.
லாரி மற்றும் வேன்களில் ‘கட் டாயம் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தும் சட்டம்’ மற்றும் கனரக வாகனங்களில் ஏபிஎஸ் (ஆட்டோ பிரேக் சிஸ்டம்) பொருத்த வேண்டுமென்ற சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலானது. இதையடுத்து, தமிழகம் முழு வதும் சில இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் ஆய்வு நடத்தும் பணிகள் நடந்தன. சில இடங்களில் வேக கட்டுப்பாடு கருவிகள் பொருத்தவில்லை எனக் கூறி நூற்றுக்கணக்கான வாகனங்களுக்கு எப்.சி. (தகுதிச் சான்று) வழங்கப்படவில்லை. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வரும் 6-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் கூறியதாவது:
லாரி, வேன் போன்ற வாகனங்களில் கட்டாயம் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டுமென மத்திய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்படவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பொருத்த முடியாததால் கால அவகாசம் அளிக்க வேண்டுமென கூறி வரும் 6-ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய அறிவிப்பு வெளியிட்டோம். இந்நிலையில், மத்திய அரசு அதிகாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், 2 மாதங்களுக்கு அவகாசம் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர் பார்க்கிறோம். அவ்வாறு உறுதி யளித்தால், நாங்கள் வேலைநிறுத்த முடிவை வாபஸ் பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.