வேலூர் மாவட்டம் காட்பாடியில் 19.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திறந்தவெளி மாவட்ட விளையாட்டு வளாகத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அருகில், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர். 
தமிழகம்

காட்பாடியில் ரூ.19.24 கோடியில் விளையாட்டரங்கம்: காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தின் நீண்ட நாள் கனவான திறந்தவெளி மாவட்ட விளையாட்டரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

வேலூர் இன்பென்டரி சாலையில் நேதாஜி விளையாட்டரங்கம் கடந்த 1975-ம் ஆண்டு கட்டப்பட்டது. மாவட்ட காவல் துறைக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டரங்கம் கட்டப்பட்டதால் அங்கு விளையாட்டு வீரர்கள் உரிய முறையில் பயிற்சி பெற முடியாத சூழல் இருந்தது. எனவே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு என அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும் என்பது வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் மாவட்ட விளையாட்டரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு தீவிரமாக நடந்தது. வேலூர் அடுத்த ஊசூர் அரசினர் பள்ளி மைதானத்தில் மாவட்ட விளையாட்டரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான அரசாணையும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டு ரூ.16.45 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் தொடங்க இருந்த நிலையில் திடீரென நிறுத் தப்பட்டது.

இதற்கிடையில், காட்பாடி பகுதியில் 36.68 ஏக்கர் நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வசம் நிலம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் திறந்தவெளி மாவட்ட விளையாட்டரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.16.45 கோடி நிதியை மறு மதிப்பீடு செய்து ரூ.19.24 கோடியாக உயர்த்தி நிதி ஒதுக்கப்பட்டது.

அந்த இடத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு 20 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட திறந்தவெளி விளையாட்டரங்கம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. விளையாட்டரங்கில் 46,737 சதுரடியில் பார்வையாளர் மாடத்துடன் நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது. முதல் தளத்தில் உள்ள பார்வையாளர் மாடத்தில் ஒரே நேரத்தில் 1,500 பேர் அமர்ந்து போட்டிகளை காண முடியும். மேலும், 400 மீட்டர் ஓடுதளம், கூடைப்பந்து, ஹாக்கி, கோ-கோ, கபடி, நீச்சல்குளம், கையுந்துப்பந்து, கால்பந்து, இரவு நேரத்திலும் விளையாட்டு போட்டிகள் நடத்தும் வகையில் உயர்கோபுர மின்விளக்கு வசதியும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த திறந்தவெளி விளையாட்டரங்கை நேற்று விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக விளையாட்டரங்கை திறந்து வைத்தார். தொடர்ந்து, விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில், பயிற்சி ஆட்சியர் ஐஸ்வர்யா, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT