சேலம்: "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் அரசை வழிநடத்தி வருவதால் குற்றங்கள் பெருகியுள்ளன" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியது: "தமிழக அரசு விடியல் அரசாக சொல்லி வந்த நிலை மாறி, தற்போது வெறும் அறிவிப்பு அரசாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை பெயரை மாற்றி, அதனை ஸ்டிக்கராக ஒட்டி தாங்கள் செய்ததாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், மக்கள் தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசை, வெறும் அறிவிப்பு அரசாகவே பார்த்து வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டமான அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்துவேன் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுவதும், மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரில் உணவகம் நடத்தப்படும் என அமைச்சர்கள் தெரிவிப்பதும் கபட நாடகம்.
தமிழகம் முழுவதும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் அரசை வழிநடத்தி வருவதால் இதுபோன்ற குற்றங்கள் பெருகியுள்ளன.
சமூக வளைதளங்களில் தமிழக முதல்வரை பற்றி விமர்சனம் செய்து பதிவிட்டால், அவர்களை கைது செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது எந்த வகையில் நியாயம், ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்பதை உணர வேண்டும்'' என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.