தமிழகம்

கல்லூரி இணையதளத்தில் தகவல் பதிவேற்றம் கட்டாயம்: ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மாணவர் சேர்க்கை மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை கல்லூரி இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஏஐசிடிஇ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்ட அறிவிப்பு: கல்வி நிறுவனங்களின் செயல்பாடு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தொடர்பான விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக ஏஐசிடிஇ-யிடம் கோரப்படுகிறது. இதனால், ஏஐசிடிஇ பணிச்சுமை அதிகரிக்கிறது.

முன்னதாக, கல்லூரிகளின் செயல்பாடு, மாணவர் சேர்க்கை,பணியிடங்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கல்லூரிகள் தங்களது இணையதளத்தில் முறையாகபதிவேற்ற, அங்கீகாரம் வழங்கும்போதே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சில கல்வி நிறுவனங்கள் இதை பின்பற்றுவது இல்லை. சில நிறுவனங்களின் தரவுகள் எளிமையான முறையில் அணுக முடியவில்லை.

எனவே, அங்கீகாரம் வழங்கப்படும்போது அறிவுறுத்தப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், தரவுகளை சரியான புள்ளிவிவரங்களோடு, எளிதில் கையாளும் வகையில் இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுதொடர்பான பணிகளை விரைவாக செய்யாவிட்டால், கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT