விலை குறைவால் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஏரி மற்றும் குட்டைகளில் மீன் வளர்ப்போர் முள்ளங்கியை கொள்முதல் செய்து மீன்களுக்கு உணவாக பயன்படுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 4,735 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், மற்றும் போச்சம்பள்ளி பகுதியில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். 50 நாட்களில் முள்ளங்கி அறுவடை செய்யப்படும்.
கூலி கூட கிடைக்கவில்லை
இங்கு விளையும் முள்ளங்கி பெங்களூரு, ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் சென்னை, திருச்சி, வேலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. இதேபோல, வெளியூர் வியாபாரிகளும், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது, விளைச்சல் அதிகரிப்பால், விலை குறைந்துள்ளது.
இதனால், அறுவடை கூலி கூட கிடைக்காத நிலையில், பலர் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் வயலில் விட்டு உள்ளனர்.
மேலும், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஏரிகள், குட்டைகளில் மீன் வளர்ப்போர், விவசாயிகளிடம் முள்ளங்கியை கொள்முதல் செய்து ஏரிகளில் வீசி மீன்களுக்கு உணவாக்கி வருகின்றனர்.
கிலோ ரூ.2-க்கு விற்பனை
இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது:
போச்சம்பள்ளி சுற்று வட்டாரப் பகுதியில் முள்ளங்கி கிலோ ரூ.2-க்கு கொள்முதல் செய்யப் படுகிறது. இதனால், எங்களுக்கு அறுவடை மற்றும் சந்தைக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவு கூட கிடைப்பதில்லை. இதனால் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் அவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக்கி வருகிறோம்.
மேலும், ஏரி, குட்டைகளில் மீன் வளர்க்க குத்தகை எடுத்துள்ள மீன் வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக முள்ளங்கியை கிலோ ரூ.2 விலைக்கு கொள்முதல் செய்து அவர்களே அறுவடை செய்து வாகனங்களில் எடுத்துச் சென்று ஏரிகளில் வீசி மீன்களுக்கு உணவாக்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மீன் வளர்ப்போர்கள் கூறும்போது, “தற்போது முள்ளங்கி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை வீழ்ச்சியடைந்து சாலையோரம் விவசாயிகள் கொட்டுவதை காண முடிகிறது. இதனை மீன்களுக்கு உணவாக்க முடிவு செய்து நாங்கள் நேரடியாக தோட்டத்துக்கு சென்று கொள்முதல் செய்து மீன்களுக்கு உணவாக்கி வருகிறோம்” என்றனர்.