சென்னை: நீரா பானத்தை விற்பனை செய்ய தென்னை விவசாயிகள் மிகவும் சிரமப்படுவதால், தினசரி உற்பத்தி 4,000 லிட்டரில் இருந்து 400 லிட்டராகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டாலும், கள் விற்பனை செய்ய தடை நீடிக்கிறது. இந்நிலையில், தென்னையில் இருந்து நீரா பானம் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும் என்ற விவசாயிகள் விடுத்த கோரிக்கையை முந்தைய அதிமுக அரசு ஏற்றுக் கொண்டு, அனுமதி அளித்தது.
நீரா பானம் இறக்குவதற்கு கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள மத்திய தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒரு விவசாயி 5 மரங்களில் மட்டுமே நீரா பானம் இறக்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. நீரா பானம் இறக்குவதற்கான உரிமத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் வழங்குகிறார்.
நீரா பானம் உள்ளூர் சந்தைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் விற்கப்பட்டது. ஆனால், நீரா பானம் விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லாததால் அதன் உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டது.
தமிழகத்தில் 4.50 லட்சம் எக்டேரில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 85,000 எக்டேரில்தென்னை சாகுபடி நடைபெறுகிறது. உடுமலைப்பேட்டை, சத்தியமங்கலம், தேனி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 17 நிறுவனங்களுக்கு நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சந்தைப்படுத்த முடியாத காரணத்தால், இதில் பல நிறுவனங்கள் நீரா பானம் உற்பத்தியை நிறுத்திவிட்டன. அதனால், தினசரி உற்பத்தி 4,000 லிட்டரில் இருந்து 400 லிட்டராக குறைந்துவிட்டது. நீரா பானம் உற்பத்திக்கான உரிமம், அதனைப் புதுப்பிப்பது, நீரா பானம் விற்பனை போன்றவற்றில் அரசுத் துறைகளிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை என்று தென்னை விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், இணை செயலாளர் சி.கே.பத்மநாபன் ஆகியோர் கூறியதாவது:
நீரா பானத்தை இறக்கி, சுத்தம் செய்து, ஐஸ் பாக்ஸில் வைத்து 5 நாட்கள் வரை விற்கலாம். இயற்கை விவசாயத்தில் வளர்க்கப்படும் தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை 7 நாட்கள் வரை விற்க முடியும்.
நீரா பானம் 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருப்பதற்கு ரசாயனம் கலக்கலாம். ஆனால், அதுபோல எந்த ரசாயனமும் கலக்காமல், தாய்ப்பால் போல நீரா பானத்தின் தன்மை மாறாமல் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அதனால் அதற்கான புதிய தொழில்நுட்பத்தை அரசு கண்டறிய வேண்டும் என்று கோரியுள்ளோம். அத்தகைய தொழில்நுட்பத்தில் நீரா பானத்தை பதப்படுத்தி விற்பனை செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், பக்கவிளைவுகள் எதுவும் இருக்காது.
தற்போது உழவர் சந்தை, பழமுதிர் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நீரா பானம் விற்பனை செய்யப்படுகிறது. நீரா பானம் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் ‘ஐஸ் பிளாண்ட்’ குளிரூட்டப்பட்ட வாகன வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கும் 100 சதவீதம் மானியம் தர வேண்டும். மேலும், உள்ளூர் சந்தைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நீரா பானம் பெருமளவு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், அரசுத் துறைகளிடம் தற்போது போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததாலும் நீரா பானம் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றனர்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது, “தென்னை விவசாயிகள் கோருவது போல நீரா பானத்தின் தன்மை மாறாமல் விற்பனை செய்வதற்கான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறியும்படி கோவை வேளாண் பல்கலைக்கழகம், தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளது. நீரா பானத்தை எங்கெல்லாம் சந்தைப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் அதற்கான வழிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தனர்.