தமிழகம்

வேளச்சேரி ஏரியை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: வேளச்சேரி ஏரியை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், அரசு துறைகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி ஏரி வரத்து கால்வாய் பகுதிகளில் புதிதாக உயரமான கட்டிடங்கள் கட்டப்படுவதால், ஏரிக்கு ஆபத்து ஏற்படும் என்றும், வேளச்சேரி ஏரி மற்றும்வீராங்கால் ஓடையில் கழிவுநீர்விடப்படுவதால் ஏரி மாசுபடுவதாகவும் கடந்த ஆண்டு நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. அவற்றின் அடிப்படையில் தேசியபசுமை தீர்ப்பாயம் இரு வழக்குகளை பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, வேளச்சேரிஏரி, அதன் வரத்து கால்வாயில் உள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யகூட்டுக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் ஏரியை பராமரிக்கும் பொதுப்பணித் துறை, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய மாவட்ட ஆட்சியர், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டிய சென்னை குடிநீர்வாரியம் மந்தமான அணுகுமுறையை கடைபிடிப்பதாக பசுமைதீர்ப்பாய அமர்வின் உறுப்பினர்கள் விமர்சித்து இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குஅமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன்,தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கு கடந்த 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. வேளச்சேரி ஏரியை ஒட்டி கட்டிடங்கள் கட்டப்படுவதாக கூறப்படும் நிலையில், அங்கு வருவாய்த் துறை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்யாவிட்டால் நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முடியாது, சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும் முடியாது. இந்த விவகாரத்தில் வருவாய்த் துறையின் மாவட்ட தலைவராக உள்ள ஆட்சியருக்கு முக்கிய பங்கு உள்ளது.

எனவே வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், சென்னை குடிநீர் வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தனித்தனி அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT