தேர்தலில் உள்வேலைகள் செய்வதைத் தடுக்க போடியில் அதிமுக வார்டு செயலாளர்களின் வீடுகளுக்குச் சென்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை செய்து வருகிறார்.
போடி தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம், ஆண்டிபட்டி தொகுதி யில் தங்கதமிழ்செல்வன் ஆகி யோர் மீண்டும் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு அளித்துள்ளது. தங்கதமிழ் செல்வன் தோல்வி அடைந்தால் ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என அவரது ஆதரவா ளர்கள் தவறான தகவலை பரப்பிவிடக் கூடும். என்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது தீவிர ஆதரவாளரான மாவட்ட துணைச் செயலர் முருக்கோடை ராமர் தலைமையில் சிலரை தங்க தமிழ்செல்வனுடன் பிரச்சாரத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதேபோல் தனது மற்றொரு தீவிர ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் டி.டி.சிவக்குமார் உட்பட மாவட்ட நிர்வாகிகளை கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜக்கையனுடன் பிரச்சாரத்துக்கு அனுப்பிவிட்டு தற்போது போடி நகர், ஒன்றிய நிர்வாகிகளை மட்டும் வைத்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
இது குறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
போடியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் செயலாளர்களாக நியமிக்கப்பட் டுள்ள பலர் தங்கதமிழ்செல்வனின் தீவிர ஆதரவாளர்கள். போடி நகரில் திமுகவுக்கு ஆதரவு பெருகி வருவதாகத் தெரிகிறது. மேலும் ஐந்துமுனை போட்டி நிலவுவதால் நகரில் கணிசமான வாக்குகளை பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
இதை பயன்படுத்தி சில அதிருப்தி வார்டு செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தேர்தலில் உள்ளடி வேலை செய்துவிட்டால் அவர் தோல்வி யடைய நிறைய வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க கடந்த இரண்டு நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் போடியில் உள்ள ஒவ்வொரு அதிமுக வார்டு செயலாளர் வீட்டிற்கும் நேரடியாகச் சென்று தேர்தல் களப் பணி ஆற்றுவது குறித்து ஆலோசனை செய்து வருகிறார் என்றனர்.