தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தை நேற்று பார்வையிட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரிய கோயிலில் தரிசனம்செய்தார். தொடர்ந்து, கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோயிலில் இன்று நடைபெறும் விஸ்வ வித்யாலயா வேத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தஞ்சாவூருக்கு நேற்று மதியம் வந்தார்.
தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த ஆளுநரை முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கத் தலைவர் கர்னல் சி.டி.அரசுதலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து, தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள், நூல்கள், காகித ஓவியங்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சிறப்புகளை விளக்கும் ஒளி - ஒலி காட்சி ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று (மார்ச் 13) காலை கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோயிலில் விஸ்வ வித்யாலயா வேத பாடசாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பின்பு, தஞ்சாவூருக்கு வந்து மாலையில் தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெறும் வடகிழக்கு மாநிலங்களின் கலைவிழாவில் பங்கேற்ற பிறகு, இரவு தஞ்சாவூரில் ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து, நாளை (மார்ச் 14) காலை திருச்சி வழியாக சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.