தமிழகம்

கோவை சம்பவம்: ‘சாதி வேறுபாடுகளை களைய முனைப்பான நடவடிக்கை தேவை

செய்திப்பிரிவு

கோவை மாவட்டம், சூலூர் போகம்பட்டி அருகேயுள்ள பொன்னாங்காணி கிராமத்தில், இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த ராமு என்பவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக சூலூர் போலீஸார் வழக்கு பதிந்து, 12 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர், பொன்னாங்காணி கிராமத்தில் ஆய்வு செய்தார். இரு தரப்பு மோதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும், நேரில் சம்பவத்தை பார்த்தவர்களிடமும், விசாரணை நடத்திய காவலர்களிடமும் விசாரித்தார். அப்போது, மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மனித உரிமைகள் பிரிவு ஐஜி செந்தாமரைக் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மத்திய அரசும், தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருந்து வருகிறது.

இந்த மோதல் நிகழ்வு பழிவாங்கும் சம்பவமாக மாறாமல் இருக்க இரு தரப்பினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காவல்துறை கூட்டங்களை நடத்த வேண்டும். உயிரிழந்த ராமுவின் மனைவிக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர மாவட்ட வருவாய்த் துறை ஏற்பாடு செய்யவேண்டும். சாதி வேறுபாடுகளைக் களைய முனைப்பான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்,’’ என்றார்.

SCROLL FOR NEXT