தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் அடமானம் வைக்கப்பட்ட விவசாயியின் நகை எடை குறைந்ததாக புகார் எழுந்த நிலையில், வங்கியின் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு காமநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூரில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை பல ஆண்டுகளாக செயல்படுகிறது. வங்கி கிளை மேலாளராக சுதாதேவி உள்ளார்.
நகை மதிப்பீட்டாளராக திருப்பூரை சேர்ந்த சேகர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் விவசாயி கோவிந்தராஜ் (52), வீட்டில் இருந்த தங்க நகையை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி பணத்தை செலுத்தி நகையை திருப்பியுள்ளார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது, நகையின் எடை குறைந்திருப்பதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இது குறித்து கோவிந்தராஜ்கூறும்போது, "கடந்த ஆண்டு நகையை மதிப்பீட்டாளரிடம் அளித்துவிட்டு, ஸ்டாம்ப் வாங்க சென்றிருந்தேன். அவர் தான் நகையை எடை போட்டு எழுதி உள்ளார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி நகையை திருப்பியபோது, நகையின் ஒரு பகுதி நீளமாகவும், மறுபகுதி அளவு குறைவாகவும் இருப்பது தெரியவந்தது.
நகையின் மொத்த எடை ஐந்தே முக்கால் பவுன். ஆனால், சுமார் 1 கிராம் அளவுக்கு எடை குறைந்திருப்பதைக் கண்டுஅதிர்ச்சியடைந்தோம். வங்கியில் முறையிட்டும் உரிய பதில் இல்லை. எனக்கு ரூ. 5000 இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இதுதொடர்பாககாமநாயக்கன் பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸாண்டர் கூறும்போது, "விவசாயி அடமானம் வைத்த தேதியில் வங்கியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவு, அதே விவசாயி பணம் செலுத்தி நகையை திருப்பியபோது உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு காமநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
வங்கியை பொறுத்தவரை, விதிமுறைகளின்படி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நகையை வாங்கிச் சென்றவர், மறுநாள் வந்துதான் எடை குறைந்துள்ளதாக கூறியுள்ளார்" என்றார்.