பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இருந்து பிரித்து, புதிதாக பெரும்பாக்கம் காவல்நிலையம் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
ஆனால், சிஎஸ்ஆர், முதல்தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை போன்ற முக்கிய பணிகள் காவல் நிலையத்தில் நடைபெறவே இல்லை. மாறாக ஏற்கெனவே செயல்பட்டு வந்த பள்ளிக்கரணை காவல்நிலையத்திலேயே வழக்குகள் பதியப்பட்டு வந்தன.
இதனால், வழக்குப் பதிவு செய்வதிலும் வழக்கை விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்பது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில் நாளிதழ் செய்தி எதிரொலியாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வதற்கான கணினிகளும் அதற்குண்டான சாப்ட்வேர் போன்றவை ஏற்படுத்தப்பட்டு, தற்போது வழக்குப் பதிவுசெய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நாயை துப்பாக்கியால் சுட்ட வழக்கு முதன்முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் 488 சிஎஸ்ஆர், 674 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாக்கம் காவல் நிலையம் தொடர்பாக செய்தி வெளியிட்டு வழக்குப் பதிவு செய்வதற்கு உதவிய இந்து தமிழ் திசை நாளிதழுக்கு காவல்துறையினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.