கல்வராயன்மலையில் உள்ள கீழ்வலசை, மேல்வலசை கிரா மங்களில் பெருங்கற்கால நினைவு சின்னங்கள், கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக தி.மலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பழனிசாமி தலைமையிலான குழுவினர் கூறும்போது, ‘‘தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே கல்வராயன்மலையில் உள்ள கீழ்வலசை, மேல்வலசை, அக் கரைப்பட்டி கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டோம். கீழ் வலசை கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ள இடத்தில் பல்வேறு காலங்களைச் சேர்ந்த சிலைகள், நடுகற்கள், சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய பலகைகற்கள் கண்டெடுக்கப்பட்டன. 5 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு, மனிதர்கள் பயன்படுத்திய 5 கற்கருவிகளை மக்கள் வணங்குகின்றனர்.
இதேபோல், அரசினர் உண்டு உறைவிட பள்ளி அருகே உள்ள விநாயகர் கோயிலில் 20-க்கும் மேற்பட்ட கற்கால கருவிகளை வைத்து மக்கள் வழி படுகின்றனர்.
மேல்வலசை கிராமத்தில் உள்ள கோயில் ஒன்றில், இரும்புகருவிகள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட கற்கால கருவிகள் உள்ளன.
மேலும், மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்திட்டைகள் உள்ளன. நான்கு புறமும் செங்குத்தாக கற்களை வைத்து, அதன்மீது பெரிய பலகை கல் வைக்கப் பட்டுள்ளது. கிழக்கு திசையில் உள்ள கல்லில் வட்ட வடிவு துளை உள்ளது. இந்த கற்திட்டை உள்ளே சிலையை வைத்து பீமாரபட்டி கிராம மக்கள் வழி, வழியாக வணங்கி வருகின்றனர். இந்த கற்திட்டைகள் இன்று வரை கிராம மக்களின் வழிபாட்டில் உள்ளன. இவ்விடத்தில் இரும்பை உருக்கி கருவிகளை செய்வதற்கான தடயங்கள் காணப்படுகின்றன.
இவ்விடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பழமைகளை பாதுகாக்க வேண்டும்” என்றனர்.