தமிழகம்

கேத்தி பள்ளத்தாக்கில் பாதை ஆக்கிரமிப்பால் தண்ணீர் இன்றி தவிக்கும் காட்டெருமைகள்

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கம், கட்டுமானங்கள், வளர்ச்சிப் பணிகள் போன்ற பல காரணங்களால் வனப்பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், தண்ணீர், உணவு தேடி யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள், தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் மனித-வனவிலங்கு மோதல் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இந்நிலையில், கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள நீரோடையை காட்டெருமைகள் நெருங்கவே முடியாதபடி பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளுக்கு செல்ல முடியாமல் சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் காட்டெருமைகள் நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுதொடர்பாக நீலகிரி உதவி வனப்பாதுகாவலர் சரவணன் கூறும்போது, ‘‘ நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் தங்கள் கூட்டத்தில் வெளியேறும் விலங்குகள், குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் புகுந்து விடுகின்றன. இதனால் ஏற்படும் மனித-விலங்கு மோதல்களை தவிர்க்க அறிவியல் ரீதியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக சர்தேச வனவிலங்குகள் நிதியத்துடன் இணைந்து, வனத்துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, காட்டெருமைகளின் வழித்தடத்தில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றவும், பிரச்சினைக்குரிய விலங்குகளை இடமாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விலங்குகள் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், வனங்களில் உள்ள களைச்செடிகள், அந்நிய தாவரங்களான கற்பூரம், சீகை மரங்களை அகற்றி, புல்வெளிகளை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT