சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி வீதிஉலா விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சூரிய வட்டம், சந்திர வட்டம், கிளி, அன்ன வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
இந்நிலையில், அதிகார நந்தி சேவை நேற்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. அதிகார நந்தி வாகனத்தில் கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் சர்வ அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் வீதிஉலா வந்தார். தொடர்ந்து, கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்விடை வாகனங்களில் பரிவார தேவதைகள் உலா வந்தனர்.
தொடர்ந்து, திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 15-ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அதற்கேற்ப அடிப்படை வசதிகளை செய்யும் பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.