சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசினார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை. உடன், மாநிலப் பொதுச் செயலர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு 
தமிழகம்

பாஜக சார்பில் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் அண்ணாமலை ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சி மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் உமா ஆனந்தன் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், சென்னையில் கட்சியை வளர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதித்து, முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசும்போது, "சென்னை மாநகராட்சித் தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளீர்கள். எனவே, தோல்வியைப் பற்றித் கவலைப்படக் கூடாது. தொடர்ந்து மக்களுக்காக உழைக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தமுறை வெற்றி வாய்ப்பைப் பெற முடியும். நம்பிக்கையுடன் தொடர்ந்து பணியாற்றுங்கள்" என்றார்.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் கரு.நாகராஜன், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, சென்னை மாநகராட்சி தேர்தல் பணிக் குழுத் தலைவர் கராத்தே தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT