தமிழகம்

ஆளுங்கட்சிக்கு துணை போகும் அதிகாரிகளை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

செய்திப்பிரிவு

ஆளுங்கட்சிக்கு துணை போகும் அனைத்து அதிகாரிகளையும் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தருமபுரியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக அனைத்து நடத்தை விதிகளும், பொது விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன. சாதாரண நிகழ்ச்சிகளுக்கே பொதுமக்களை லாரி போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது என விதிகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. பிரச்சாரத்திற்காக மக்களை வாகனங்களில் அழைத்து வருவது நடத்தை விதிகளின் படியும் குற்றமாகும்.

ஆனால், இந்த விதிகளை மதிக்காமல் ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்திற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர். இதனால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் தனியார் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த வாகனங்கள் அனைத்தையும் ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் மிரட்டி அழைத்து வந்துள்ளனர். இது நடத்தை விதி மீறலாகும். ஆனால், இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல்கள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இத்தகைய சூழலில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நியாயமாக நடைபெறுமா? என்ற ஐயம் எழுகிறது. இதை போக்க வேண்டியது ஆணையத்தின் கடமையாகும்.

ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு துணை போகும் அனைத்து அதிகாரிகளையும் உடனடியாக தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் வரை காத்திருக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து நேர்மையான அதிகாரிகளை வரவழைத்து தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். தேர்தலை நியாயமாக நடத்தி ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT