தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி முடித்து வீட்டுக்கு செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் காலை 10 மணிக்கு கல்லூரி தொடங்கி மாலை 4.30 வரை நடத்துவதற்கு பதிலாக, காலை 10 மணிக்கு கல்லூரி தொடங்கி மாலை 3.30 மணி வரை நடத்த வேண்டும். கல்லூரி வளாகத்தில் கேன்டீன், நூலகம், ஆடிட்டோரியம், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். கல்லூரிக்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும், கல்லூரிக்கு சென்று வர பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் முரளிதரன், வட்டாட்சியர் அரவிந்தன் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரி நேரத்தை மாற்ற முடியாது என்றும், கல்லூரி முடிந்ததும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட மற்ற கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து, மதியம் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.