கொடைக்கானல் மலை மச்சூர் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ.  
தமிழகம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ: அணைக்க முடியாமல் திணறல்

பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானல்: கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பிலான வனப்பகுதியில் உள்ள அரியவகை மரங்கள் கருகிவருகின்றன. பரவிவரும் காட்டுத்தீயை அணைக்க நவீன உபகரணங்கள் இல்லாததால் தீ பரவுவதை தடுக்கமுடியாமல் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இரவில் குளிர்ந்த வானிலை காணப்பட்டாலும், பகலில் வெயிலின் தாக்கம் இருந்துவருகிறது. கடந்த இரண்டு தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திலையில், கொடைக்கானல் அருகே மச்சூர் வனப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு வேகமாக பரவத்துவங்கியது. வெயிலின் தாக்கம் காரணமாக செடிகள் காய்ந்தநிலையில் இருப்பதால் தீ பரவுவதன் வேகம் அதிகரித்துள்ளதால் 100 க்கும் மேற்பட்ட பரப்பில் தீ பரவி அப்பகுதியில் உள்ள அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் கருகிவருகின்றன. இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிக்குள் சென்று காட்டுத்தீயை அணைக்க நவீன உபகரணங்கள் இல்லாததால் தீயை அணைப்பதில் வனத்துறையினர் திணறிவருகின்றனர்.

தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயால் தோகைவரை, மச்சூர், பெருமாள்ம‌லை உள்ளிட்ட பகுதிகளும், வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

கொடைக்கானல் ம‌ச்சூர் தோகைவ‌ரை மலைப்பகுதிகளில் நேற்று இர‌வு ப‌ர‌விய‌ தீயானது காற்றின் வேக‌த்தில் பெருமாள்ம‌லை வ‌ன‌ப்ப‌குதி வ‌ரை தொட‌ர்ந்து ப‌ற்றி த‌ற்போது வ‌ரை எரிவ‌தால் தீயை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத நிலை தொடர்கிறது.

நேற்று காலை கொடைக்கானல் எம்.எம்.தெரு குடியிருப்பு பகுதியின் அருகில் வருவாய் நிலத்தில் திடீரென ஏற்பட்ட தீ, குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியது. தீயணைப்புத்துறையினர் அரைமணிநேரத்திற்கு மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ குடியிருப்பு பகுதிகளுக்கு பரவலாமல் அணைத்தனர்.

கடுமையான வெப்பம் காரணமாக தீ பற்றி எரிகிறதா அல்லது யாரேனும் தீவைத்தார்களா என்பது குறித்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் விசார‌ணை மேற்கொண்டு வருகின்றனர். வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்களில் தீ வைக்கும் ந‌ப‌ர்க‌ள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT