சென்னை: முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் பேச்சு கண்ணியத்தோடும் இருக்கும் என திமுகவிற்கு நம்பிக்கை இருக்குமானால், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தனியார் தொலைக்காட்சிகளில் முழு நேரடி ஒளிபரப்பு செய்ய திமுக தயாரா? என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது
இது குறித்து அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தங்கள் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களின் பேச்சானது கருத்தோடும், கண்ணியத்தோடும் இருக்கும் என்று திமுகவிற்கு நம்பிக்கை இருக்குமானால் தனியார் தொலைக்காட்சிகளை சட்டமன்றத்தில் அனுமதித்து ஒளிபரப்பு செய்யச் சொல்லலாமே? எந்தச் செலவுமின்றி முழு நேரடி ஒளிபரப்பு சாத்தியமாகும். திமுக தயாரா?
பட்ஜெட் உரை மற்றும் கேள்வி நேரம் மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரின் அனைத்து நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் தொழில்நுட்ப சிக்கல் இருக்கிறது என்ற அறிவிப்பு அலட்சியத்தின் வெளிப்பாடே.அரசிற்கு உதவும்பொருட்டு தொழில்நுட்ப சிக்கலைக் களைய மநீம தயார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.