ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா, ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெற்று வருகிறது. இக்கோயில் குண்டம் இறங்கும் நிகழ்வில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
கரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பண்ணாரி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு, பண்ணாரியம்மன் திருவீதி உலா செல்வதும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா நடக்கவுள்ளது. கடந்த 7-ம் தேதி பூச்சாட்டுதலுடன் குண்டம் திருவிழா தொடங்கிய நிலையில், தற்போது சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது.
இரண்டாம் நாளான நேற்று அலங்கரிங்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய அம்மன், தாண்டாம்பாளையம், பகுத்தம்பாளையம், மோகன் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று அருள்பாலித்தார். பாதையெங்கும் புனிதநீர் ஊற்றி, பூக்களைத் தூவி பக்தர்கள் அம்மனை வரவேற்று வழிபட்டனர். முக்கிய நிகழ்வான குண்டம் விழா 22-ம் தேதி நடக்கிறது.
40 தீயணைப்பு அலுவலர்கள்
இதனிடையே பண்ணாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவின் போது 40 தீயணைப்புத்துறை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, வனத்தையொட்டிய பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவின்போது, வரும் 19-ம் தேதி முதல் இரு தீயணைப்பு வாகனம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படவுள்ளது. குண்டம் திருவிழாவின்போது 40 தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், என்றார்.