உத்தராகண்ட், உத்தரபிரதேச மாநில தேர்தலில் சிறுபான்மை மக்கள் பாஜக-வுக்கு வாக்கு அளித்துள்ளனர் என சேலத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக நடத்தப்பட்ட வெறுப்பு பரப்புரைக்கு பதிலடியாக பாஜக-வுக்கு வெற்றி கிடைத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பாக செயல்பட்டது. சாதி அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. உத்தராகண்ட், உத்தரபிரதேச மாநில தேர்தலில் சிறுபான்மை மக்கள் பாஜக-வுக்கு வாக்கு அளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை நம்பி திமுக வீணாக போகிறது. மொழி, இனவாத பிரிவினையை திமுக ஆதரிக்கக் கூடாது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும். தமிழகத்தில் கடந்த 9 மாத கால திமுக ஆட்சியில் சாதி பிரச்சினை, மதவாதம், பயங்கரவாதம் மற்றும் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலை தொடர்ந்தால் சட்டப்பிரிவு 356-யை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை கலைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். திராவிடத் திணிப்பு தொடர்ந்து இருக்குமானால் நாடு முழுவதும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற அடிப்படைக் கொள்கையை அமல்படுத்த வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.