தமிழகம்

சூர்யா படத்துக்கு மிரட்டல்: பாட்டாளி மக்கள் கட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: நடிகர் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரையிடக் கூடாது என்று பாமகவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களை சந்தித்து கடிதம் கொடுத்து வருகின்றனர். சூர்யா, ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தில் நடித்து, தயாரித்து வெளியிட்டிருந்தார். இப்படம் வெளியானபோதும் பாமகவினர் பல்வேறு வகையான மிரட்டல்களை விடுத்தனர். எந்தவொரு தனிப்பட்ட பிரிவினரையும் இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என அப்படத்தின் இயக்குநர் தெளிவுபடுத்தினார். சூர்யாவும் உரிய விளக்கமளித்தார்.

ஆனால், சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்கும்வரை அவர் தொடர்புடையை எந்த திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்கமாட்டோம் என்று பாமகவினர் மிரட்டுவது கலைச் சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் எதிரானது. சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செயலில் ஈடுபடுவதை பாமக நிறுத்திக்கொள்ள வேண்டும்.பாமகவின் இச்செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவாக கண்டனக்குரல் எழுப்ப வேண்டும். சூர்யாவின் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாவதற்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT