லக்னோ: சஹாரா பரிவார் குழும நிறுவனங்கள் நிதி முறைகேடு காரணமாக முடக்கப்பட்டன. இதனால் இதில் முதலீடு செய்த லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிறுவன சொத்துகளை முடக்கி அதன் மூலம் நிதியை வசூலித்து முதலீட்டாளர்களுக்கு அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் 9 ஆண்டுகளாகியும் பங்கு பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையத்தில் செலுத்தப்பட்ட ரூ. 24 ஆயிரம் கோடி முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிக்கப்படாமல் அப்படியே உள்ளது.
இது தொடர்பான வழக்கு பாட்னா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சஹாரா குழும நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உமேஷ் பிரசாத், கடந்த 9 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 128 கோடி தொகையை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு செபி அளித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதையும் செபி பின்பற்றவில்லை என தெரிவித்தார்.
முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையை திரும்ப அளிப்பது தொடர்பாக எவ்வித கட்டுபாடு மற்றும் நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதிக்கவில்லை என்று தெரிவித்த வழக்கறிஞர், முதலீட்டாளர்கள் செலுத்திய தொகையை திரும்ப அளிக்காத காரணத்தால் 2 சஹாரா நிறுவனங்களின் செயல்பாடுகளை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் முடக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ரொக்கத் தொகையை முதலீட்டாளர்களுக்கு அளிக்கத் தவறும் பட்சத்தில் அதை மீண்டும் சஹாரா நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
2012-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், சஹாரா நிறுவனம் செலுத்திய தொகையை முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும்.
இதில் கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை அந்நிறுவனத்திற்கு திரும்ப அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதையும் வழக்கறிஞர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு செபி-க்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இம்மாதம் 25-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அதற்குள் செபி பதில் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.